கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் விடுதலை செய்தது தொடர்பான 2 ஜி மேல்முறையீடு வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சி.பி.ஐ அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்பதாக அறிவித்தது. அதன்படி, இன்று (அக்டோபர் 5-ஆம் தேதி) முதல் தினமும் 2 ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை நடக்கவுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் அனைவரையும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்வதாக 2017ம் ஆண்டு அறிவித்தது.
இதையடுத்து, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தன.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வரும் நீதிபதி பிரஜேஷ் வரும் நவம்பர் மாதம் 30ஆம் தேதி ஓய்வு பெறுவதால் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் முறையிடப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு காலகட்டங்களில் மேல்முறையீடு வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இன்னும் இறுதி வாதங்கள் எட்டப்படாத நிலையில் தற்போது வழக்கின் விசாரணை தீவிரமாகியுள்ளது.