புதுச்சேரியில் இன்று 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 619 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 388 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 10 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 648ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஊடங்கில் சில தளர்வுகள் அளித்த பின்னர் தொற்று பரவல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே புதுச்சேரியில் வரும் ஜூலை 2ம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும், அதன் பின்னர் மத்திய அரசின் அறிவுறுத்தல் பின்பற்றப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லை என்றால் தனியார் மருத்துவமனைகளை நாட அறிவுறுத்தியுள்ளார். மேலும் 200க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களை நியமனம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.