மக்கள் படம் பார்ப்பதே தங்கள் கவலைகளை மறந்து சந்தோசமாக இருக்க தான் அந்த வகையில் என்றும் மக்களுக்கு நல்ல தரமான பொழுதுபோக்கு படங்களை கொடுப்பவர் தான் இயக்குனர் சுந்தர் சி. இவர் தனது ஆரம்ப நாட்களில் நடிகரும் இயக்குனருமான மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதன்பிறகு 1995 ஆம் ஆண்டு முறைமாமன் படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார் சுந்தர் சி. முதல் படமே இவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் வெற்றி இவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
அதுமட்டுமில்லாமல் அதில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இவரது படங்களில் என்றுமே நகைச்சுவை ஹைலைட் தான். கவுண்டமணி ஆரம்பித்து இக்காலத்தில் சந்தானம் வரை பயன்படுத்திய ஒரு சில இயக்குனர்களில் இவரும் ஒருவர். இதன் பிறகு உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், அன்பேசிவம், வின்னர், கலகலப்பு, அரண்மனை வரை பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
குறிப்பாக கைப்பிள்ளை, வீரபாகு, பால்சாமி போன்ற நகைச்சுவைக் கதாபாத்திரம் இன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு இயக்குனராக மட்டுமில்லாமல் தலைநகரம் படத்தின் மூலம் கதாநாயகனாக வெற்றி பெற்றார். தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ரஜினி, கமல், அஜித் ஆகியோரை இயக்கிய பெருமை சுந்தர் சி-க்கு உண்டு. இவரது ஆம்பள திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஒன்று. இது போன்ற பல வெற்றிப் படங்களை அவர் மேலும் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.