ஈரோடு அருகே பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் தான் சேமித்து வைத்த ரூபாய் 24 ஆயிரம் மதிப்பிலான பழைய 500 1000 ரூபாய் நோட்டுகளை அரசு மாற்றி தருமா என கேள்வியுடன் கண்ணீர் விட்டபடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை அடுத்த பொதியாமூக்கனுர் என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் சோமு. இவர் பார்வை இல்லாத மாற்றுத்திறனாளி ஆவார். குழந்தைகள் இல்லாத சோமு தனது மனைவி பழனியம்மாள் உடன் தனியாக வசித்து வந்துள்ளார். ஊரடங்கிற்கு முந்தைய காலம் வரையிலும் சோமு தனது ஊருக்கு அருகில் உள்ள கிராமப் புறங்களில் ஊதுபத்தி கற்பூரம் உள்ளிட்டவற்றை கொண்டு சென்று விற்பனை செய்து வருவதன் மூலம் வரும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தார். ஊரடங்கின் போது அரசு அளிக்கும் 100 நாள் வேலை, தோட்டவேலை உள்ளிட்ட தன்னால் முயன்ற கூலி வேலைக்கு கணவன் மனைவி இருவரும் சென்று குடும்பத்தை ஓட்டி வந்தனர்.
இதையடுத்து ஊரடங்கு திண்டுக்கல் பகுதியில் கடுமையாக்கப்பட எந்த வேலையும் கிடைக்காததால் வருமானத்திற்கு சோமு மிகவும் சிரமப்பட்டார். அதற்கு முன்பாக கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பல வருடங்களாக தான் சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை தன் தாயாரிடம் கொடுத்து வைத்திருந்தது சோமுவுக்கு ஞாபகம் வந்தது. அவருடைய தாயாரும் வயது மூப்பில் வரும் ஞாபக மறதி காரணமாக சோமுவிடம் பணத்தை தர மறந்துவிட்டார். இதையடுத்து தாயிடம் சென்று பணத்தை கேட்க தான் பணத்தை வைத்த இடத்தை மறந்து விட்டேன் என்று தாய் கூற, சோமு, அவரது மனைவி, தாய் மூன்று பேரும் தேட ஆரம்பித்து பின் பணத்தை சமையல் அறையில் உள்ள ஒரு டப்பாவிலிருப்பதை கண்டுபிடித்து எடுத்தனர்.
இதையடுத்து மிகுந்த சந்தோஷம் அடைந்த சோமு பணத்தை எடுத்துக்கொண்டு மளிகைக் கடைக்குச் சென்றார். அங்கே இது பழைய 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் இது செல்லாது. இதை நான்கு வருடங்களுக்கு முன்பே தடை செய்துவிட்டார்கள் என்று அவர்கள் கூற, அதிர்ச்சி அடைந்த சோமு கண்ணீர் விட்டபடி வீட்டிற்கு வந்தார். பின் அவரது வீட்டிற்கு அருகே உள்ள இளைஞர்கள் மூலம் சமூக வளைதளத்தில் பல வருடங்களாக கஷ்டப்பட்டுதான் சிறுக சிறுக சேர்த்த 24 ஆயிரம் ரூபாய் பழைய 500, 1000 நோட்டுகளாக உள்ளது. சத்தியமாக எனது கையில் இந்த பணம் இருந்தால் நான் மாற்றி இருப்பேன். எனது தாய் வயது மூப்பின் காரணமாக என்னிடம் கூறவும், இந்த பணத்தை மாற்றவும் மறந்துவிட்டார். எனவே அரசு இந்த பணத்தை மாற்றித்தர உதவுமா? என வேண்டுகோள் விடுத்துள்ளார்.