பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு சென்னை வானகரத்தில் தொடங்கியுள்ளது. இந்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க ஈபிஎஸ் தரப்பினர் முடிவு செய்துள்ளனர். அதேசமயம் எடப்பாடி முயற்சியை முறியடிக்க ஓபிஎஸ் தரப்பினர் ஆயத்தமாக உள்ளனர். இதற்கிடையே நீதிமன்ற உத்தரவை பின்பற்றியே பொதுக்குழு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்படாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகுறது. இந்த கூட்டத்தை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் முன்மொழிந்தார்
இந்நிலையில் 23 தீர்மானங்களையும் பொது குழு நிராகரிக்கிறது என்றும் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பொதுக்குழு மேடையில் ஆவேசமாக முழக்கமிட்டார். இதனால் பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் கடும் கூச்சல் குழப்பம் நிலவி வருகிறது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் எழுந்து கூச்சலிட்டனர். தீர்மானங்களை நிறைவேற்றி தர வேண்டும் என்று ஓபிஎஸ் மேடையில் பேசிய நிலையில் சி.வி சண்முகத்தின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.