கொரோனாவால் பலியான 22 பேரின் உடல்களை ஒரே ஆம்புலன்சில் திணித்து மயானத்துக்கு எடுத்துச் சென்ற சம்பவம் மிகப் பெரிய பரபரப்பை எழுந்துள்ளது.
இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் பீட் மாவட்டத்தில் சுவாமி இராமானந்த தீர்த்தர் அரசு ஊரக மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் உள்ள பிணவறையில் கொரோனாவால் இறந்த 22 உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த 22 உடல்களை நேற்று முன்தினம் ஒரே ஆம்புலன்சில் திணித்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. இது மிகப் பெரிய சர்ச்சையாக எழுந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் சிவாஜி சுக்ரே கூறியதாவது “இந்த மருத்துவமனையில் போதுமான ஆம்புலன்ஸ் வசதி இல்லாததே இதற்கு காரணம். இந்த மருத்துவமனையில் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின்போது ஐந்து ஆம்புலன்ஸ்கள் இருந்தன. அவற்றில் மூன்று ஆம்புலன்ஸ்கள் திரும்பப் பெறப்பட்டு விட்டதால் தற்போது இரண்டு மட்டுமே வைத்து சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் 3 ஆம்புலன்ஸ்களை திரும்ப வழங்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு ஏற்கனவே கடிதம் எழுதி இருக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நகராட்சி தலைவர் ராஜ் கிஷோர் மருத்துவ கல்லூரிக்கு ஒரு ஆம்புலன்ஸ் வழங்கப்போவதாக தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இரண்டு ஆம்புலன்ஸ்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.