தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது என்று சொல்லப்படும் நிலையில் தற்போது கோவை மாநகரில் திமுக சார்பில் ஆளுநருக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர் தமிழக அரசியலில் பரபரப்பான ஒன்றாக மாறியுள்ளது. அதாவது தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளார்.
குறிப்பாக ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் மற்றும் நீட்விலக்கு மசோதா போன்றவைகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஆளுங்கட்சி மட்டுமே தமிழக மக்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது கோவை வடக்கு மண்டல திமுக தலைவர் வே. கதிர்வேல் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது அரசியலில் பரபரத்து கொண்டிருக்கிறது. அதில் ஆளுநர் ஆண்டு செலவு 6.5 கோடி. 2020 முதல் இந்த ஆண்டு இது வரை 21 மசோதாக்கள் நிலுவையில் இருக்கிறது என்ற தலைப்பிடப்பட்டுள்ளது.
அதன் பிறகு ஆளுநர் கிடப்பில் போடப்பட்டுள்ள மசோதாக்களின் மொத்த விபரமும் போஸ்டரில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆளுநரின் அலமாரியில் தூங்கும் 21 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டு மக்கள் குறட்டை விட்டு தூங்க முடியுமா? தூங்கினால் துயரப்பட நேரிடும், எச்சரிக்கை போன்ற பல்வேறு வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது.