இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக போட்டியிட 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், ஜோலார்பேட்டை- கிருஷ்ணகிரி, ஓசூர் ரயில் திட்டத்திற்கு ஃபைனல் லொகேஷன் சர்வே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2.5 கோடி பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள ரயில்வே துறை அதிகாரிகள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சர்வே பணிகளுக்காக ரயில்வே துறை வரும் 16ம் தேதி ஒப்பந்தம் கோர உள்ளது. 60 நாட்களில் இந்த சர்வே பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகளில் ட்ரோன் சர்வே மற்றும் மேனுவல் ஊழியர்கள் சர்வே நடத்த உள்ளனர். இந்த ரயில்வே திட்ட பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே இந்த பணிகள் முடிந்து விடும். அதன் பிறகு ரயில் விடுவதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம். பெங்களூரில் இருந்து ஓசூர் வரை கொண்டுவரப்படும் மெட்ரோ திட்ட பணிகளுக்கு கர்நாடகா அரசு பணம் கொடுக்க தயாராக உள்ளது. தமிழக அரசும் இதில் சேர்ந்தால் தான் இந்த திட்டம் நிறைவேறும். இந்த திட்டத்தில் இணைந்து செயல்பட தமிழக அரசை கேட்பதற்காக விரைவில் பாஜக சார்பில் முதல்வரை சந்திக்க உள்ளோம். மேலும் தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் பாஜக வெல்ல வேண்டும் என நாங்கள் காத்திருக்கிறோம். இதில் பாஜக போட்டியிட 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் கிருஷ்ணகிரி தொகுதியையும் ஒன்று என்று அவர் தெரிவித்துள்ளார்.