2024-ம் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதில் இடதுசாரிகளுக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். திரிபுராவில் இடதுசாரிகள் மீது பாஜகவின் வன்முறையை கண்டித்து சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைப்பை இடதுசாரி ஜனநாயகக் கட்சிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய திருமாவளவன், இது திரிபுரா பிரச்சனை, கம்யூனிஸ்ட் பிரச்சினை என ஒதுங்கி இருக்க முடியாது 2024 தேர்தலுக்கு முன் ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்கும் பொறுப்பு இடதுசாரிகளிடம் உள்ளது எனவும், பாஜக வீழ்த்துவதில் இடதுசாரிகளுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது என தெரிவித்தார்.
இதில் அவர், “திரிபுரா பிரச்சினை என்பது கம்யூனிஸ்ட்களின் பிரச்சனை என்றும், திரிபுரா பிரச்சினை என்பது இடதுசாரிகளின் பிரச்சினை என்று நாம் வெளியே நிற்க முடியாது, விலகி நிற்க முடியாது. அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளுக்கும், நான் இந்த மாபெரும்
ஆர்ப்பாட்டத்தின் முன்பாக நான் அறைகூவல் ஒன்றை விடுகிறேன். இடதுசாரிகளும், திராவிட இயக்க ஜனநாயக சக்திகளும், புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரில் இயங்க கூடிய ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து தேசிய அளவில் செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது.
தமிழ்நாடு அளவில் மட்டுமல்ல, அடுத்து 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பாகவே தேசிய அளவில் இத்தகைய ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பும், இடதுசாரிக் கட்சிகளின் தேசிய அளவிலான தலைவர்களுக்கும், தமிழ் நாட்டுத் தலைவர்களுக்கும் உண்டு என்பதை பொறுப்புணர்வுடன் நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்” என்று கூறினார்.