Categories
மாநில செய்திகள்

20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!!

சென்னையை தவிர்த்து பிற மாநகராட்சிகளில் மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப 3,147 புதிய பணியிடங்களை தோற்றுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்திருக்கிறார். அதாவது பெருநகர சென்னை மாநகராட்சியை தவிர்த்து இதர மாநகராட்சிகளுக்கான விதிகள் கடந்த 1996 ஆம் வருடம் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் போது புதிய பணியிடங்களை உருவாக்குவது பற்றியும் அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கிறது. மாநகராட்சிகளில் அலுவலகம் அமைத்தல், மைய அலுவலகங்களை சீரமைத்தல் தொடர்பான வரையறுகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு மாநகராட்சியும் நான்கு பிரிவுகளைக் கொண்டும் இயங்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி பணியாளர் பிரிவு, வருவாய் பிரிவு மற்றும் கணக்கு பிரிவு பொறியியல் மற்றும் குடிநீர் வழங்கல் பிரிவு, பொது சுகாதார பிரிவு போன்ற பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும். இந்த சூழலில் நகராட்சி நிர்வாக இயக்குனரின் சார்பில் அரசுக்கு அனுப்பிய பரிந்துரையில் தமிழ்நாட்டில் உள்ள 20 மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப அளவுகோல் நிர்ணயம் செய்து ஒரே சீரான புதிய பணியிடங்களை தோற்றுவிக்கவும் ஏற்கனவே உள்ள பணியிடங்களில் சீரமைத்து முறைப்படுத்துவது தொடர்பாகவும் சில விவரங்களை கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் உள்ள 20 மாநகராட்சிகள் பல்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் மாநகராட்சிகள் தற்போதைய நிலவரப்படி மக்கள் தொகைக்கு ஏற்றவாறு மாநகராட்சி பணியிடங்கள் ஒரே சீராக இல்லை எனவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சென்னை தவிர பிற மாநகராட்சிகளில் 2021 ஆம் வருடம் தோராய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒரு கோடியே 41 லட்சத்து 51 ஆயிரத்து 829 மக்கள் இருக்கின்றனர். இவற்றில் சிறப்பு நிலை நகராட்சிகளில் இருந்து மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்ட தூத்துக்குடி, திருப்பூர், நாகர்கோவில், ஓசூர், திண்டுக்கல், தஞ்சாவூர், போன்ற மாநகராட்சிகளில் சில சிறப்பு நிலை நகராட்சிகளில் காணப்படும் பணியிடங்களுக்கும் குறைவான பணியிடங்களில் இருக்கிறது. மேலும் புதிய மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ள தாம்பரம், கடலூர், சிவகாசி, காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம் போன்ற ஆறு மாநகராட்சிகளிலும் போதுமான பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டியது அவசியமாக இருக்கிறது. இதற்கான மாநகராட்சிகள் மக்கள் தொகைக்கு ஏற்ப அவை வகைப்படுத்தப்பட்டிருக்கிறது 10 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட திருப்பூர், சேலம், திருச்சி, கோவை, மதுரை, தாம்பரம் போன்ற சிறப்புநிலை அ மற்றும் ஆ என வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் வரையிலான மக்கள் தொகை கொண்ட திருநெல்வேலி, ஈரோடு, தூத்துக்குடி, ஆவடி, வேலூர் போன்ற தேர்வுநிலை மாநகராட்சிகளாகவும் மூன்று முதல் ஐந்து லட்சம் மக்கள் கொண்ட ஓசூர், தஞ்சாவூர், நாகர்கோவில் போன்றவை தேர்வு நிலை ஒன்று மாநகராட்சிகளாகவும் 3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள திண்டுக்கல் கடலூர், காஞ்சிபுரம், சிவகாசி, கரூர், கும்பகோணம் போன்ற தேர்வுநிலை 2 எனவும் பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மாநகராட்சிகளில் புதிதாக தோற்றுவிக்கப்பட இருக்கின்ற பணியிடங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள பணியிடங்களை சீரமைத்து முறைப்படுத்தும் பொருட்டு புதிய பணியிடங்கள் அனுமதிக்க நகராட்சி நிர்வாக துறை இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது பரிந்துரைகளை ஏற்று பணியிடங்களின் வரையறை மற்றும் ஏற்கனவே உள்ள பணியிடங்களை முறைப்படுத்தி மொத்தம் 3,417 பணியிடங்கள் அனுமதிக்கப்படுகிறது. இதற்கான செலவினத்தை அந்தந்த மாநகராட்சி நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என தனது உத்தரவில் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |