ஈக்வடார் தலைநகரில் 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 24 பேர் பலியான நிலையில் 12 பேர் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
ஈக்வடாரின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் தலைநகர் குயிட்டோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 24 பேர் பலியானதாகவும் மற்றும் 12 பேரை காணவில்லை என்றும் அந்நாட்டின் மேயர் சாண்டியாகோ கார்டெராஸ் கூறியுள்ளார். இந்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் சாலைகள் பாதிப்படைந்துள்ளது.
இந்த மோசமான வெள்ளத்தினால் வீடுகள் மற்றும் தெருக்கள் சேற்றால் மூடப்பட்டுள்ளன. கடந்த திங்களன்று இரவில் பெய்த பலத்த மழையினால் லா காஸ்கா மற்றும் லா கொமுனா ஆகிய பகுதிகளுக்கு அருகே உள்ள பள்ளத்தாக்கில் தண்ணீர் தேங்கி மண் மற்றும் பாறை குடியிருப்புகளுக்குள் சென்று மின்சாரத்தை துண்டித்தது.
இதுகுறித்து அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்பு கூறியதாவது, 48 பேர் இதுவரை காயமடைந்துள்ளனர்.நிலச்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மேலும் உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இருப்பிடங்களை அமைத்து நகரின் தெருக்களை சுத்தம் செய்ய மேயர் அலுவலகம் பணியை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. குயிட்டோவில் நேற்று பெய்த கனமழை ஒரு சதுர மீட்டருக்கு 75 லிட்டர் என்ற அளவில் பெய்துள்ளது.அதாவது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .