தருமபுரியிலிருந்து, பெங்களூருவுக்கு கடத்த முயன்ற இரண்டு டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூரூ செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே குடிமைப்பொருள் வாணிபக்கழக தனி வட்டாட்சியர், தனி வருவாய் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியே வந்த சரக்கு வாகனத்தை வழிமறித்து சோதனை செய்ததில், அதில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது. இதனையடுத்து வாகனத்துடன், அரிசியை பறிமுதல் செய்த அலுவலர்கள் ஓட்டுநர் அஜித் என்பவரை கைது செய்தனர்.
பின்னர் அஜித்திடம் மேற்கொண்ட விசாரணையில், தருமபுரியிலிருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு 50 மூட்டைகளில் 2 டன் எடையுள்ள ரேஷன் அரிசியைக் கடத்தி செல்வது தெரியவந்தது.இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.