அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நாட்டில் துப்பாக்கி சூடு, குண்டு வெடிப்பு என சர்வ சாதாரணமாக துயர சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு தான் அமெரிக்காவில் தேவாலயம் அருகே விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவின் சார்லோட்டேவில் உள்ள கரோலினா பல்கலைக்கழகத்தில் நேற்று கடைசிநாள் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது . அப்போது ஒருவன் உள்ளே நுழைந்து அங்கிருந்த மாணவர்களை துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டான். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். இதில் 3 பேர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இந்த சம்பவம் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார், வகுப்பில் இருந்த மாணவர்களை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றினர்.மேலும் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகத்தின் படி 22 வயது இளைஞனான ட்ரைஸ்டன் ஏ டெர்ரலை (Trystan A terrell) போலீசார் கைது செய்து அவனிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.