2 கடைகளில் செல்போன்கள், பணத்தை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம்-சென்னிமலை சாலையில் உள்ள நால்ரோடு பகுதியில் தேவராஜ் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வேலை முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து தேவராஜ் மறுநாள் காலையில் கடையைத் திறந்து பார்த்தபோது உள்ளே வைத்திருந்த 3 செல்போன்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் மர்மநபர்கள் ஓட்டைப் பிரித்து உள்ளே நுழைந்து செல்போன்களை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதனைத தொடர்ந்து அதே பகுதியில் ராஜ்குமார் என்பவர் கோழி கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் தனது கடையை பூட்டி விட்டு மறுநாள் கடையை திறந்து பார்த்தபோது மேஜையில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து அவர்கள் காங்கேயம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 2 கடைகளிலும் செல்போன்கள் மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக பரஞ்சேர்வழி பகுதியில் வசிக்கும் கார்த்தி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த செல்போன்கள் மற்றும் ரூ.1,500-யையும் பறிமுதல் செய்தனர்.