ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டத்தில் இரண்டு செய்தியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கில் அரசுக்கு எதிராக கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், அந்நாட்டு தலைநகர் பாக்தாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக இரண்டு செய்தியாளர்கள் காரில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக ஜிப்பில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் அந்தக் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியது. இதில், அந்த இரண்டு செய்தியாளர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திஜிலா தொலைக்காட்சியில் பணிபுரிந்துவந்த அஹ்மன் அப்தெல் சமாத்(39) என்ற நிருபரையும், சஃபா கஹாலி(37) என்ற கேமராமேனையும் அடையாளம் தெரியாத கும்பல் படுகொலை செய்துள்ளது.
இது ஒரு கோழைத்தனமான செயல்; வெறுக்கத்தக்தும் கூட. ஈராக்கில் செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மீது பயங்கரவாதக் குழுக்கள் தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாகியுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
ஈராக் அரசு செய்தியாளர்களை பாதுகாக்க வேண்டும். எந்த அச்சுறுத்தலுமின்றி அவர்கள் பணிசெய்யவதற்கான சூழலையும் அந்நாட்டு அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளது.
நிருபர் சமாத், தான் இறப்பதற்கு முன்பாக, ஈராக் அரசை சாடி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.