ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் உள்ள 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் ‘கோவிட்-19’ (கொரோனா வைரஸ்) எனப்படும் தொற்று நோய் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம், சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் காரணமாக இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இதனிடையே சீனாவில் இருந்து ஜப்பான் வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அந்நாட்டின் யோகோஹாமா துறைமுகத்தில் சிறைபிடிக்கப்பட்டது. இந்த கப்பலில் 3,700 பேர் பயணித்த நிலையில், 174 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் அதில், 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த கப்பலில் 6 தமிழர்கள் உட்பட சுமார் 100 இந்தியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.