கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் இரண்டு டாக்டர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் ராம் குமார் என்பவர் டாக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தென்காசியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக குருவிகுளம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் சிதம்பர ராஜா, மருந்து விற்பனைப் பிரதிநிதி கார்த்திக் மற்றும் டாக்டர் முத்து கணேஷ் போன்றோருடன் ஒரே காரில் சென்றுள்ளார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு நான்கு பேரும் அதே காரில் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் பாவூர்சத்திரம் அருகில் இருக்கும் திரவிய நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென காரானது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருக்கும் புளிய மரத்தின் மீது மோதி விட்டது.
இந்த விபத்தில் டாக்டர்கள் சிதம்பர ராஜா, ராம்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த கார்த்திக் குமார் மற்றும் முத்து கணேஷ் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு உயிரிழந்த சிதம்பர ராஜா மற்றும் ராம்குமாரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.