2 1/2 கோடி ரூபாய் அசையா சொத்துக்களை வரதட்சணையாக கேட்ட கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள நரசோதிபட்டி சக்திநகர் பகுதியில் தொழிலதிபர் ரவிகட்டி வசித்து வருகிறார். இவருக்கு சாய்சிந்து என்ற மகள் இருக்கிறார். இவர் பட்டதாரி ஆவார். கடந்த வருடம் சாய்சிந்துக்கும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த என்ஜினீயர் ஸ்ரீகாந்த்கரே என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் ஸ்ரீகாந்த்கரே பெங்களூரில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த திருமணத்தின்போது 33 லட்சம் ரூபாய், 14 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார், 6 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் போன்றவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இதனையடுத்து திருமணத்திற்கு பிறகும் மாப்பிள்ளை வீட்டாருக்கு சாய்சிந்துவின் பெற்றோர் தங்களால் முடிந்த அளவுக்கு பல உதவிகளை செய்து வந்துள்ளனர். எனினும் சாய்சிந்துவின் கணவர் வீட்டார் கூடுதல் வரதட்சணை கேட்டு வந்துள்ளதாக தெரிகிறது.
இதனிடையில் சாய்சிந்துவிடம் 2 1/2 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களை வரதட்சணையாக கணவர் தரப்பினர் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஸ்ரீகாந்த்கரே, அவருடைய தந்தை சைலம் கரே, தாய் பாக்கியம்மாள் ஆகியோர் சாய்சிந்துவை அடிக்கடி தொல்லை செய்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து சாய்சிந்து சார்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, 2 1/2 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களை சாய்சிந்துவின் கணவர் வீட்டார் கூடுதலாக வரதட்சணை கேட்டது தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் ஸ்ரீகாந்த்கரே, அவரது பெற்றோர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் ஸ்ரீசாந்த்கரேவை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவருடைய தாய்- தந்தையை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.