உத்திரபிரதேசத்தில் அட்ராஸ் மாவட்டத்தில் வகுப்பறையில் மாணவர் தூங்கியதை கவனிக்காமல் பள்ளியை மூடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட 10 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் கூறியபோது, பிரேம் பிரகாஷ் என்ற இரண்டாம் வகுப்பு மாணவர் கடந்த புதன்கிழமை வகுப்பறையில் அசந்து தூங்கி இருக்கின்றார். மாணவர் தூங்கியதை கவனிக்காமல் பள்ளியில் பணிபுரிபவர்களும் பள்ளி ஆசிரியர்களும் மாணவரை வகுப்பறையில் வைத்து பூட்டி விட்டு சென்றிருக்கின்றனர்.
அந்த மாணவர் மாலை 5 மணிக்கு எழுந்து அழ தொடங்கியதாக கூறப்படுகின்றது. மாணவனின் அழுகை குரலை கேட்டு அக்கம் பக்கத்தினர் பள்ளி வகுப்பறையை நோக்கி விரைந்து மாணவர் வகுப்பறை உள்ளே வைத்து பூட்டப்பட்டதை அறிந்தனர். அந்த மாணவருடைய அப்பாவும் பள்ளிக்கு வர அவர்கள் பள்ளி வகுப்பறையின் கதவை உடைத்து மாணவரை மீட்டுள்ளனர் என்றனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த அந்த பகுதியின் வட்டார கல்வி அலுவலர் இது பற்றி விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். முதல் கட்ட விசாரணைக்கு பின் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட பத்து ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.