இரண்டு மனைவிகளையும் கத்தியால் குத்திய ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ உதவியாளரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் இருக்கும் நந்தவன தெருவில் சந்தானம் என்பவர் வசித்துவருகிறார். இவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ உதவியாளராக வேலை செய்து வருகின்றார். கடந்த 7 வருடங்களுக்கு முன்பு சந்தானம் சசிகலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த பெண் எய்ட்ஸ் தடுப்பு மையத்தில் வேலை செய்து வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றான். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் மனைவியை விட்டு பிரிந்த சந்தானம் சாத்தான்குளம் பகுதியில் வசிக்கும் மாலதி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தனது முதல் மனைவியான சசிகலாவின் வீட்டிற்கு சென்ற சந்தானம் தன்னுடன் வாழ வருமாறு அவரை வற்புறுத்தியுள்ளார். ஆனால் சசிகலா அதற்கு மறுப்பு தெரிவித்ததால் சந்தானம் அவரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும் வீட்டில் இருந்த தனது இரண்டாவது மனைவியான மாலதியை சந்தானம் கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தானத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.