ஏலச்சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு முருகபவனத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்துள்ளனர். இவர்கள் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனிடம் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு பெண் பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். அவரிடம் திண்டுக்கல்லை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் சீட்டு சேர்ந்து பணம் செலுத்தி வந்துள்ளோம். இந்நிலையில் 2 கோடி ரூபாய் வரை சீட்டு பணம் செலுத்தியுள்ளோம்.
ஆனால் 20 மாதங்கள் முடிவடைந்த பின்னரும் அந்த பெண் சீட்டு பணத்தை திரும்ப தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனையடுத்து கடந்த மாதம் வெளியூர் சென்ற அந்த பெண்ணின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. எனவே 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்துவிட்டு தலைமறைவான அந்த பெண்ணிடமிருந்து பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.