கடன் பெற்று தருவதாக கூறி கவுன்சிலரிடம் 9 லட்சம் ரூபாயை ஏமாற்றிய போலி நிதி நிறுவன இயக்குனரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குழப்பகிரி தோட்டப் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். 29-வது வார்டு கவுன்சிலராக பணிபுரிந்து வரும் இவர் ஏலக்காய் ஏற்றுமதி நிறுவமும் நடத்தி வருகின்றார். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காஞ்சிபுரத்தை சேர்ந்த முரளி என்பவர் தான் ஒரு நிதி நிறுவனத்தில் மேலாண்மை இயக்குனராக பணிபுரிந்து வருவதாக கூறி சங்கரிடம் அறிமுகமாகியுள்ளார்.
இதனையடுத்து அவர் 2 கோடி வரை கடன் பெற்று தருவதாக சங்கரிடம் கூறினார். இதை நம்பிய சங்கரும் கடனுக்காக விண்ணப்பித்த நிலையில் முரளி கூறியபடி 5 காசோலைகள் மற்றும் முக்கிய பத்திரங்களில் கையொப்பமிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது கடன் பெறுவதற்கு முன்பணமாக 9 லட்சம் ரூபாயை இரண்டு தவணையாக முரளி கூறிய வங்கி கணக்கிற்கு செலுத்தியுள்ளார்.
ஆனால் வெகு நாட்களாகியும் முரளி கடன் பெற்று தராமல் ஏமாற்றி வந்தார். ஒருகட்டத்தில் முரளி செல்போனை எண்ணை அணைத்து விட்டு தலைமறைவாக உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் உடனடியாக இதுகுறித்து தேனி மாவட்ட சூப்பிரண்டு அதிகார பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.