தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் கூட்டுத் தொடர் முழுவதையும் புறக்கணிக்க இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆளுநர் உரையை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் அவையில் ஆளுனர் பேச அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையில் நடவடிக்கை எடுக்காததையும் கண்டித்து தொடர் முழுவதையும் புறக்கணிக்க இருப்பதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், நான் எழுந்து பேசுவதற்கு முயற்சித்தேன். ஆளுநர் அவர்கள் என்னை பேச அனுமதிக்கவில்லை. கவர்னரை பொருத்தவரைக்கும் முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் பக்கபலமாக இருக்க கூடிய வகையில் ஊழலுக்கு துணை நிற்க கூடிய வகையில் செயற்படுகின்றார் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் போட்டு அனுப்பி வைத்தது. ஒரு வருஷம் இல்லை… இரண்டு வருடத்திற்கு முன்னாடி அனுப்பிய தீர்மானத்துக்கு இதுவரைக்கும் 7பேர் விடுதலை செய்வதற்கான சூழல் உருவாக்கல். எனவே அதையும் கண்டித்து நாங்கள் கவர்னர் உரையை மட்டுமல்ல, இந்த கூட்டுத்தொடர் முழுமையும் புறக்கணிப்பது என்று முடிவு செய்துள்ளோம் என முக.ஸ்டாலின் தெரிவித்தார்.