ஆன்லைன் ஆடர் பழக்கம் மக்களிடையே அதிகரித்து கொண்டே வருகிறது. மளிகைப் பொருட்களில் தொடங்கி மருந்து, உணவு, உடை உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஆன்லைனில் ஆர்டர் தேவை அதிகரித்துள்ளது என்றே கூறலாம். கொரோனா காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் முறை என்பது சற்று கூடுதலாகவே அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் நேரில் சென்று சாப்பிங் செய்ய தயங்கினர்.
இதையடுத்து ஆன்லைன் ஷாப்பிங் வழியாக பொருட்களை வாங்கவே ஆர்வம் காட்டினர். குறிப்பாக ஆன்லைன் டெலிவரிகளில் முக்கியமான ஒன்று உணவு வகைகள் தான். இணையதள உணவு விநியோகத்தில் முன்னணியில் உள்ள சொமேட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் செப்டோ என்ற இணையவழியில் காய்கறிகளை விநியோகம் செய்யும் நிறுவனத்தை வாங்க முனைப்பு காட்டி வருகின்றன. கடந்த 2 மாதங்களாக இதற்கான பேச்சுவார்த்தைகளில் இரு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.
சொமேட்டோ ,ஸ்விக்கி நிறுவனம் வாங்க துடிக்கும் செப்டோ நிறுவனம் 19 வயது இளைஞர்களுடையது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக பொறியியல் படிப்பிலிருந்து இடைநின்ற ஆதித், பலிச்சா, கைவால்யா ஆகிய இருவர் செப்டோ என்ற இணையவழி நிறுவனத்தை தொடங்கினார். காய்கறிகளை இணையவழியில் விநியோகம் செய்யும் பணிகளை அவர்கள் செப்டோ மூலம் ஒருங்கிணைந்து செய்து வருகின்றனர்.
19 வயதேயான இரு இளைஞர்களின் இந்த நிறுவனத்தை தற்போது இணையவழி உணவு விநியோகத்தில் முன்னணியில் உள்ள சொமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் வாங்குவதற்கு முனைப்பு காட்டி வருகின்றன. ஆனால் இந்த இரு நிறுவனங்களின் சலுகைகளையும் செப்டோ நிறுவனத்தைத் தொடங்கிய இளைஞர்கள் மறுத்துள்ளனர். இது தொடர்பாக பேசிய செப்டோ நிறுவனத்தின் நிறுவனர் ஆதித், செப்டோ நிறுவனத்தை எந்த நிறுவனத்துடனும் கூட்டுவைத்து நடத்த விரும்பவில்லை. தனியாகச் செப்டோவை வளர்க்க விரும்புகிறோம். அதற்காக பல தரப்பிலிருந்து 1.1 பில்லியன் டாலர் நிதியுதவி கோரியுள்ளோம் என்று கூறியுள்ளார்.