நைஜர் நாட்டில் வேன் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் 18 நபர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜர் என்ற மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் போகோ ஹராம், ஐ.எஸ், அல்கொய்தா ஆகிய தீவிரவாத அமைப்புகள் மற்றும் பல கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் இயங்கி வருகிறது. இந்த அமைப்புகள், மக்கள் மற்றும் அரச படையினரை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதே போன்று பண்டிட்ஸ் என்னும் ஆயுதமேந்திய கொள்ளை கும்பலும் அந்நாட்டில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் அங்குள்ள டில்லபெரி என்னும் மாகாணத்தின், போனி ஹடா பகுதியில் 13 பேர் ஒரு வேனில் பயணித்திருக்கிறார்கள். வாகனம், ஆள் நடமாட்டமற்ற பகுதியில் சென்ற சமயத்தில், திடீரென்று ஆயுதமேந்திய படை வாகனத்தை வழிமறித்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது.
இதில் பயணிகள் 13 பேரும் பரிதாபமாக பலியாகினர். இதேபோல், அதே மாகாணத்தில் இருக்கும் டிசிகொரூயு என்னும் கிராமத்தில் வாகனத்தில் பயணம் மேற்கொண்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஐந்து பேர் பலியாகினர். எனவே, டில்லபெரி மாகாணத்தில் துப்பாக்கி சூடு தாக்குதலில் மொத்தம் 18 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.