2020 மற்றும் 2021 ஆம் கல்வி ஆண்டில் 179 கல்லூரிகள் மூடப் இருப்பதாக அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழு தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பின் காரணமாக மிகத் தாமதமாக கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர்கள் தங்களது பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான மறுகணமே பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான வழிகள் என்னவென்பதை இன்டர்நெட் மூலம் தேடி அதற்கான பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். சமீபத்தில் இந்தியாவில் இந்த கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை குறைந்து காணப்படும் பட்சத்தில், ஏராளமான கல்லூரிகள் மூடப்படும் என்ற தகவல்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கள் மூலமாக வெளிவந்தன. தற்போது 2020 – 2021 ஆம் கல்வி ஆண்டில் 179 கல்லூரிகள் மூடப்படுவதாக அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தெரிவித்துள்ளது.
பொறியியல் கல்லூரிகள், வணிக மேலாண்மை கல்லூரிகளில் போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லாததால் 134 கல்லூரிகள் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் கோரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. இதை தவிர 762 கல்லூரிகளில் பல பாடப்பிரிவுகளை நீக்கியதன் காரணமாக 70 ஆயிரம் இடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 2020-2021 ஆம் கல்வியாண்டில் புதிதாக 164 கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 1300 கல்லூரிகளில் மொத்தம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் இடங்களை அதிகரித்துக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.