Categories
மாநில செய்திகள்

துபாயில் இருந்து முதற்கட்டமாக சென்னை அழைத்துவரப்படும் 177 தமிழர்கள்..!

இந்தியர்களை அழைத்து வர துபாய் சென்ற விமானம் இன்று இரவு 8 மணிக்கு சென்னை வருகிறது. சென்னைக்கு வரும் விமானத்தில் 177 பயணிகள் துபாயில் இருந்து அழைத்துவரப்பட உள்ளனர். அதேபோல, 235 பயணிகளுடன் சிங்கப்பூரில் இருந்து வரும் விமானம் டெல்லியில் தரையிறங்க உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதியில் இருந்து விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் இந்தியர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

விமானம் மூலமும், கப்பல் மூலமாகவும் அமெரிக்கா, துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு மட்டும் 4 விமானங்களில் துபாய், மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இதையடுத்து இன்று துபாயில் இருந்து 2 விமானங்களில் 400க்கும் மேற்பட்டவர்களை அழைத்து வரப்படவுள்ளனர்.

இதனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசின் முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தினர். இந்த நிலையில், முதற்கட்டமான துபாயில் வசிக்கும் 117 பேர் விமானம் மூலம் இன்று இரவு சென்னை அழைத்துவரப்பட்ட உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளனர். இவர்கள் அனைவரும் தனியார் ஓட்டலில் தங்கவைக்கப்படவுள்ளனர்.

Categories

Tech |