14 நாட்களுக்குள் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கை நடைபெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து பல கட்டங்களாக அமலில் இருப்பதால், பல குடும்பங்களின் பொருளாதாரம் சரிந்து வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்து வந்த பல பெற்றோர்கள் தற்போது வருமானமின்றி தவித்து வருவதால், தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி, ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மட்டும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளியில் அதிக பணம் கட்டி படிக்க வைத்தால் தான் பிள்ளைகளுக்கு நல்ல தரமான கல்வி கிடைக்கும் என்ற போலியான நம்பிக்கை உடைந்து, அரசுப் பள்ளிகளிலும் தரமான கல்வி கிடைக்கும். அங்கேயும் நம் பிள்ளைகள் நன்றாகப் படிப்பார்கள் என்ற உண்மையை உணர்ந்து பெற்றோர்கள் செய்த இந்த செயலுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதேபோல் அரசுப்பள்ளிகளை தொடர்ந்து பெற்றோர்கள் ஆதரித்து வந்தால் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளி மென்மேலும் பல சாதனைகளைப் புரியும் என்றும் தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு முன்பு வரை அரசு பள்ளி மாணவர்களை காட்டிலும், தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவர்களின் விகிதம் பெருமடங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.