144 தடை உத்தரவு காரணமாக பல்வேறு மாநிலங்களில் மசூதிகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் மசூதிகளில் வழிபாடு நடைபெறுவது வழக்கம். இருப்பினும் இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளவாறு, 144 தடை உத்தரவை ஏற்று டெல்லி, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு இடங்களில் மசூதிகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத் மெக்கா மசூதி மூடப்பட்டது.
தெலுங்கானாவில் உள்ள மதகுருக்களும் மக்களை வீடுகளில் இருந்தே வழிபாடு நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இதேபோன்று ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள மசூதிகளும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதகுருக்களும் அவர்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். டெல்லியில் ஜமா மஸ்ஜித்தின் ஷாஹி இமாம், சையத் அகமது புகாரி கூறியதாவது, ” கொரோனா வைரஸின் கடுமையான சவாலை இந்த உலகம் எதிர்கொள்கிறது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டிய நேரம் இது.
முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை தொழுகை உட்பட அனைத்து பிரார்த்தனைகளையும் தங்கள் வீடுகளிலிருந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என கூறினார். அகில இந்திய இமாம் அமைப்பின் தலைமை இமாம் டாக்டர் இமாம் உமர் அகமது இலியாசி கூறியதாவது, ” கொரோனா வைரஸ் குறித்த அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் இமாம்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். அனைத்து முஸ்லிம்களுக்கும் இன்று ‘நமாஸ்’ தங்கள் வீடுகளில் மட்டுமே வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்”. எனக் கூறியுள்ளார்.