தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.141.4 கோடி வசூல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.34.3 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் ரூ.18 கோடிக்கும், திருச்சியில் ரூ.32 கோடிக்கும், சேலத்தில் ரூ.33 கோடிக்கும், கோவையில் ரூ.32 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது. மதுவிற்பனை வசூல் கடந்த சனிக்கிழமை அன்று ரூ.120 கோடிக்கு விற்பனையானது.
அதில், சென்னையில் 17 கோடி ரூபாய்க்கும், திருச்சியில் ரூ.26 க்கும், மதுரையில் 27 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் ரூ.25 க்கும், கோவையில் ரூ.24 கோடி ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மற்றும் ஒவ்வொரு பகுதியிலும் ரூ.20 முதல் ரூ.60 கோடிக்கு நிகராக மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம், மதுக்கடைகள் அனைத்திலும் சாதாரண மதுபானங்கள் விற்று தீர்ந்தன.
மேலும், மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பதாலும் மது வாங்க குடிமகன்கள் தயக்கம் காட்டி வந்தனர். இந்த நிலையில், தமிழகத்தில் மூடப்பட்டுள்ள மதுக்கடைகளில் இருந்து சாதாரண மதுபானங்களை திறக்கப்பட்டிருக்கும் கடைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக மதுவிற்பனை அதிகரித்துள்ளது. வரும் நாட்களிலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் பகுதியில் கூடுதலாக 40 மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மதுவிற்பனை வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்திற்கு வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.