சீன நாட்டில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் 14 பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சீன நாட்டின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் குய்சோவ் என்னும் மாகாணத்தில் உள்ள பீஜி நகரத்தில் ஒரு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று மாலை நேரத்தில் அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கட்டுமானப் பணியாளர்கள் ஏராளமானோர் பணியை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 3000 சதுர மீட்டர் அளவுடைய நிலம் மற்றும் 5000 சதுர மீட்டர் கொண்ட பாறைகள் சரிந்து விழுந்தது. இதில் பணி மேற்கொண்டிருந்த கட்டுமானப் பணியாளர்கள் 17 பேர் இடிபாடுகளில் மாட்டிக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து பிற பணியாளர்கள் அவர்களை மீட்க போராடினர்.
அதன் பின்பு, விபத்து தொடர்பில் காவல்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தீயணைப்பு பணியாளர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சேர்ந்து சரிந்து கிடந்த பாறைகளை அகற்ற போராடினர்.
அவை பெரிய பாறைகளாக இருந்ததால், அவர்களுக்கு மீட்பு பணி கடும் சவாலாக இருந்தது. இதனால் இரவு முழுக்க மீட்பு பணிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று காலையில் இடிபாடுகளுக்குள் மாட்டிக்கொண்ட 17 பணியாளர்கள் மீட்கப்பட்டனர். ஆனால், அதில் 14 பேர் உயிரிழந்துவிட்டனர்.
மீதமிருந்த 3 பேரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களின் நிலையும் மோசமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அச்சம் ஏற்பட்டிருக்கிறது.