வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் நபர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் அனுப்பியுள்ளார்.
அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் தங்களது சொந்த மாநிலத்திற்கு அழைத்துவர மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வெளிமாநிலத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், சுற்றுலா சென்றவர்கள் ஆகியோரை தமிழகம் அழைத்து வர மத்திய அரசு அதிகாரிகளுடன் பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
வருவாய் பேரிடர் மேலாண்மை துறை செயலர் அதுல்ய மிஸ்ராவை தலைமை செயலாளர் சண்முகம் நியமித்திருந்தார். இந்த நிலையில், இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியகளுக்கும் அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, ” தமிழகத்துக்கு வரும் நபர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
தனிமைப்படுத்தப்படுவதற்கான ஸ்டிக்கரை வீடுகளில் ஒட்ட வேண்டும். சிறப்பு பயண பாஸ் முறைகேடு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.