14 வயது சிறுமிக்கு 40 வயதுடைய நபருடன் திருமணம் நடக்க இருந்த நிலையில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தில் இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி தனது தாயுடன் வசித்து வருகின்றாள். சிறுமியின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தாய் தனியாக கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றார். சிறுமி ஏழாம் வகுப்பு வரையில் படித்த நிலையில் குடும்ப வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாமல் போனது.
குடும்பம் நடத்த மிகவும் கஷ்டமான சூழ்நிலை ஏற்பட்டதால் சிறுமியின் தாயார் வசதியான இடத்தில் மகளை திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தார். இதையடுத்து ஆந்திர மாநிலத்தை சார்ந்த ஒரு கிராமத்தில் வசித்து வரும் 40 வயதுடைய நபருக்கு இந்த சிறுமியை திருமணம் செய்து கொடுக்க சிறுமியின் தாய் ஒப்புக்கொண்டார். அந்த நபருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகியுள்ளது. சிறுமிக்கு குடியாத்தம் அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து ஆட்சியருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனால் சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து குடியாத்தம் தாசில்தார் லலிதா, வருவாய் ஆய்வாளர் காந்தி, கிராம நிர்வாக அலுவலர் குமார் மற்றும் சைல்டு ஹெல்ப்லைன் பணியாளர் மணிசேகரன் ஆகியோர் போலீசாருடன் அந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தபோது வந்த தகவல் உண்மை என்பதை அறிந்து திருமணத்தை தடுத்து நிறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து வேலூரில் உள்ள குழந்தைகள் நல குழுமத்தின் முன் சிறுமியை ஆஜர்படுத்துமாறு தாயாருக்கு அறிவுறுத்தப்பட்டது.