தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழையின் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை வெளுத்து வாங்கியது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மக்களுடைய இயல்பு வாழ்க்கை முடங்கியது.பருவமழை முடிந்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவியது. இந்நிலையில் நேற்று சென்னையில் கடந்த மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
திடீரென்று பெய்த கனமழையின் காரணமாக பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். மெட்ரோ ரயில் நிலையத்திலும் கூட்டம் அலை மோதியது. பல்வேறு பகுதிகளிலும் கடைகலுக்குள் மழை நீர் புகுந்தது. இதனைத்தொடர்ந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தநிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, இராமநாதபுரம், அரியலூர், ஆகிய 14 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை தவிர செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் மழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.