கன்னியாகுமரியில் தாயின் இரண்டாவது கணவர் 13 வயது சிறுமியை கற்பமாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்து வருகிறார் 35 வயதான அந்தப் பெண். அவருக்கு 13 வயதில் மகள் உள்ளார். அருகில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமி கடந்த சில நாட்களாக அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்த சிறுமி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியை பரிசோதித்த போது அவர் கருவுற்று இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் உடனடியாக குலைசல் மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகின.
கணவரை இழந்த நிலையில் சிறுமியின் தாய் தனது மகளுடன் தனித்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் 40 வயதான சசிகுமாரின் அறிமுகம் அந்தப் பெண்ணுக்குக் கிடைத்தது. மனைவி விவாகரத்து பெற்ற நிலையில் தனித்து வாழ்ந்த சசிகுமாரும் அந்தப் பெண்ணும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். கேரளாவிற்கு சென்று கொத்தனார் வேலை பார்த்த சசிகுமார் , அவ்வப்போது இரண்டாவது மனைவி வீட்டிற்கு வந்து செல்வார். மது போதையில் வீட்டிற்கு வரும் அவர் மனைவியை ஏதாவது வாங்க சொல்லி வெளியே அனுப்பிவிட்டு சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார்.
பின்னர் அந்த சிறுமியிடம் வெளியே சொன்னால் நீயும் உன் தாயும் நடுத்தெருவில் தான் நிற்கவேண்டும் என மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார் சசிகுமார். சிறுமியும் சசிகுமாருக்கு பயந்து தாயிடம் கூட நடந்ததை சொல்ல தைரியம் இல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில்தான் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு நடந்த கொடுமை தெரியவந்தது. இதையடுத்து சசிகுமார் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த குலைச்சல் மகளிர் போலீசார் கேரளாவுக்கே பேருந்தில் தப்பிச்செல்ல முயன்ற போது இரணியில் வைத்து சசிகுமாரை பொலிஸார் கைது செய்தனர்.