அருவி தடாகத்தில் தவறி விழுந்து மாணவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் வசிக்கும் 6 பள்ளி மாணவர்கள் அஞ்சு வீடு அருவிக்கு சென்று ஆபத்தை உணராமல் குளித்துக் கொண்டிருந்தனர். குளித்து முடித்த பிறகு ஒவ்வொரு மாணவராக பாறை வழியாக திரும்பி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பாக்கியபுரம் பகுதியில் வசிக்கும் தினகரனின் மகன் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனான பிரின்ஸ்(17) என்பவர் தடாகத்தை ஒட்டி இருக்கும் பாறையை கடக்க முயன்றார்.
இந்நிலையில் பாறையில் இருந்து எதிர்பாராதவிதமாக வழுக்கி சிறுவன் தடாக நீரில் விழுந்து தண்ணீரில் மூழ்கியதை பார்த்து சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாறைகளின் சரிவு பகுதியில் சிக்கியிருந்த மாணவரின் உடலை மீட்டுனர். பின்னர் மாணவரின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா பயணிகள் அஞ்சு வீடு அருவியை ரசிப்பதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அபாய அருவி என்பதால் அங்கு குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர். ஆனாலும் ஆபத்தை உணராமல் மாணவர்களும், வாலிபர்களும் அங்கு குளிப்பதால் தடாக நீரில் தவறி விழுந்து இறக்கின்றனர். எனவே அங்கு செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.