கடந்த 2014 முதல் இராணுவத்தில் பணிபுரிந்து வந்த உக்ரைனின் மருத்துவரான ஓல்கா செமிடியானோவா (வயது 48) மார்ச் 3ஆம் தேதி அன்று அந்நாட்டின் தெற்கில் உள்ள டொனெட்ஸ்க் என்ற நகரில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அதாவது துப்பாக்கிச் சண்டையின் போது ஓல்கா செமிடியானோவா வயிற்றில் பயங்கரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் அவருடன் சேர்ந்து போர்புரிந்த சக வீரர்களும் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போர் பதற்றம் நீடித்து வருவதால் அவருடைய சடலம் இன்னும் மீட்கப்படாததால் குடும்பத்தினர் மிகுந்த வேதனையுடன் காத்து கொண்டிருக்கின்றனர். மர்ஹானெட்ஸ் என்ற நகரில் வசித்து வந்த செமிடியானோவா தனது 6 பிள்ளைகளுடன் சேர்த்து தத்தெடுத்த 6 பிள்ளைகளையும் வளர்த்து வந்துள்ளார்.
இதுகுறித்து செமிடியானோவா மகள் ஜூலியா கூறியதாவது, “ இறுதிவரை அவர் வீரர்களை காப்பாற்றினார். அவர் உயிரிழந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எங்களிடம் இருக்கிறது. போர் பதற்றம் நீடித்து வருவதால் என் தாயின் உடலை இன்னும் அடக்கம் செய்ய முடியவில்லை” என்று கூறியுள்ளார். உக்ரைனில் 5-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்ற தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வரும் “சிறந்த தாய்” என்ற பட்டம் செமிடியானோவாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.