Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

11, 12- ம் வகுப்பு மாணவர்களுக்கிடையே மோதல்… பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார்…!!!

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்களுக்கு பயிற்சி தேர்வு நடைபெற்று வருகின்ற நிலையில், நேற்று முன்தினம் தேர்வு முடிந்து மாலையில் மாணவர்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதன்பின் அந்த மோதல் சமூக பிரிவாக மாறி இரு தரப்பினரும் தாக்கி கொண்டார்கள்.

இந்நிலையில் ஒடுக்கத்தூர் பகுதியில் வசிக்கின்ற ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனை பட்டா கொடுப்பதற்கு ஆய்வுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி மாணவர்கள் நிற்பதைப் பார்த்தார். அதன்பின் இது குறித்து அவர்  ஆசிரியர்களிடம் கேட்டார். அதற்குள் சம்பவ இடத்திற்கு வேப்பங்குளம் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்துள்ளனர். அப்போது அவர்கள் மாணவர்கள் இது போன்ற செயல்களில் அடிக்கடி மோதுகிறார்கள் என்று தெரிவித்தனர்.

இதனை அடுத்து வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி பெற்றோர்கள் அனைவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தாசில்தாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று அணைக்கட்டு தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையில் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பள்ளி வளாகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டார்கள் என்று எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்க வேண்டும். அப்படி எழுதிக் கொடுத்தால் மட்டும் மாணவர்கள் தேர்வு எழுத முடியும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்து எழுத்துபூர்வமாக தனது பிள்ளைகள் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்று எழுதிக் கொடுத்தார்கள். அப்போது மண்டல துணை தாசில்தார் குமரேசன், வருவாய் ஆய்வாளர் நந்தகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, தலைமையாசிரியர், ஆசிரியர் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

Categories

Tech |