இலக்கிய திறனறித் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தஞ்சை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: “தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022-23 கல்வி ஆண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படும். இந்த தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வாயிலாக மாதம் 1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இந்த தேர்வில் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கும், 50 சதவீதம் பிற தனியார் பள்ளி மாணவர்களுக்கும் பொதுவான போட்டியில் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழக அரசின் பத்தாம் வகுப்பு தரநிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்கள் அடிப்படையில் கொள் குறி வகையில் தேர்வு நடத்தப்படும். அடுத்த மாதம் 1ஆம் தேதி தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவத்தை வருகிற ஒன்பதாம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.