Categories
மாநில செய்திகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் – அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மேலும் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என மொத்தம் 22 லட்சத்து 43 ஆயிரம் பேர் பொதுத்தேர்வு பணியில் ஈடுபட உள்ளதால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என கூறியுள்ளார்.

மாணவர்கள் தேர்வை எதிர்நோக்கி ஆர்வமாக இருக்கிறார்கள் என்று கூறிய அவர், பொதுத்தேர்வுகள் முடிந்த பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தகவல் அளித்துள்ளார். மேலும் பெற்றோர்களிடம் ஆலோசனை கேட்டு அதன்படியே முடிவு எடுக்க உள்ளதாக தகவல் அளித்துள்ளார். பாடங்களை குறைப்பது குறித்தும் நிபுணர் குழு ஆலோசித்து வருகிறது, அந்த குழு அளிக்கும் அறிக்கையின் படி பாடங்களை குறைப்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அளித்துள்ளார்.

Categories

Tech |