தமிழகத்தில் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஏப்., 14 வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு ஏப்., 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவால் அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டு அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு 10,12ம் வகுப்புகளை தவிர பிற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
மேலும் மே மாதத்தில் நடைபெற இருந்த அனைத்து அண்ணா பல்கலைகழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் 12ம் வகுப்பு தேர்வு நிறைவடைந்துள்ளது.
இதனால் 10ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படுமா? இல்லையா? என கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார் தகவல் அளித்துள்ளார். தேர்வு நடைபெறும் மறு தேதி ஆலோசனைக்கு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.