தமிழகத்தில் முதன்முறையாக ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணிபுரியும் பெண்ணிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஆணுக்குப் பெண் எந்த விதத்திலும் சலித்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக உலகில் ஆண்கள் செய்யக் கூடிய அனைத்து விஷயங்களையும் பெண்கள் தயக்கமின்றி செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் முதன்முறையாக 108 ஆம்புலன்ஸ் சேவையின் ஓட்டுனராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த வீரலட்சுமி என்ற அந்தப் பெண்,
இதற்கு முன்பாக சென்னை பகுதியில் கால் டாக்ஸி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டதையறிந்து, விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றதுடன், தேனியில் ஆம்புலன்ஸ் ஓட்டுவதற்கான பயிற்சியை ஒரு மாதம் பெற்று வந்த நிலையில், இன்று முதல் தனது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பயணத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில் வீரலட்சுமிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.