Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் பணி…..!!!

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர்கள் பணி நிரப்புவதற்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1, 060 விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இவர்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறுவதற்கான தேதி, விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள், கம்ப்யூட்டர் முறையில் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். 2017 -18 கல்வியாண்டில் 1058 பணியிடங்களும், ஏற்கனவே நிரப்ப வேண்டிய காலிபணியிடங்கள் இரண்டும் இதன் மூலம் நிரப்பப்படும்.

சிவில் இன்ஜினியரிங் 112 இடங்கள், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 219 இடங்கள், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் 91 இடங்கள், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் 119 இடங்கள், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் 135 இடங்கள், ஆங்கிலம் 88 இடங்கள், கணக்கு 88 இடங்கள், இயற்பியல் 83 இடங்கள், வேதியியல் 84 இடங்கள் உட்பட 1060 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதில், மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு 4 விழுக்காடு எந்த பிரிவில் அளிக்கப்படும் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வேறு வழியில் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படாது. தேர்வர்கள் தற்போது நடைமுறையில் உள்ள இமெயில் ஐடி, செல்போன் எண் ஆகியவற்றை விண்ணப்பம் பதிவு செய்யும் பொழுது கட்டாயம் அளிக்க வேண்டும்.

இவர்களுக்கான எழுத்துத் தேர்வு கம்ப்யூட்டர் முறையில் 190 மதிப்பெண்களுக்கு மூன்று மணி நேரம் நடைபெறும். 150 வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒரு மதிப்பெண் வினாக்கள் 100, இரண்டு மதிப்பெண் வினாக்கள் 40 ஆகியவை முக்கிய பாடத்திலிருந்து இடம்பெறும்.

10 மதிப்பெண்களுக்கு பொது அறிவிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இவர்களுக்கான கேள்வித்தாள் அனைத்து பாடங்களுக்கும் கேள்விகுறி வகையில் ஆங்கில மொழியில் மட்டுமே கேட்கப்படும். தேர்வு முடிவுகளுக்குப் பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு பணி நியமனத்திற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்” என குறிப்பிட்டுள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்டு, அதில் முறைகேடுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டதால் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |