பெல்ஜியமில் தன்னை அவமானப்படுத்திய ஆசிரியரை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர் ஒருவர் பழி வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1990களில் பள்ளியில் படித்தபோது ஆசிரியர் மரியா வெர்லின்டன் தன்னை அவமானப் படுத்தியதால் குண்டர் உவென்ஸ் என்பவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆசிரியரை அவருடைய வீட்டில் 101 கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த ஆசிரியரின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசாரால் குற்றவாளி யார் என்பதை கண்டறிய முடியவில்லை.
டிஎன்ஏ பரிசோதனை மூலமாக கூட அந்த குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து குற்றவாளி தானாக முன் வந்து கிட்டத்தட்ட 16 மாதங்களுக்கு பிறகு தான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். அதோடு அவர் கொடுத்த வாக்குமூலத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆசிரியர் தன்னை காயப்படுத்தியதாகவும், அவர் தெரிவித்த மோசமான அந்த கருத்துக்களில் இருந்து மீள முடியாததால் அவரை பழிவாங்கும் நோக்கத்தில் இவ்வாறு செய்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.