சேலத்தில் ஆயிரம் கோடி செலவில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புக்கு சொந்தமான 1000 ஏக்கர் பரப்பளவில் உலக தரமிக்க ஆசியாவிலேயே மிகச் சிறந்த நவீன கால்நடை பூங்கா அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் உள்ள கால்நடை பூங்காக்களை பார்வையிட்ட முதலமைச்சர் பழனிசாமி சேலத்தில் அமைக்க இருக்கும் பூங்காவிற்கு பல்வேறு விவரங்களை கேட்டு தெரிந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து 1000கோடி செலவில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமை தாங்கியுள்ளார்.
அமையவிருக்கும் கால்நடை ஆராய்ச்சி பூங்கா மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் பிரிவில் கால்நடை மருத்துவமனை, மாடு, ஆடு, கோழிகளுக்கு பண்ணையும் இரண்டாவது பிரிவில் பால், மீன், இறைச்சி, முட்டை போன்ற உணவுப் பொருட்களை பதப்படுத்தவும் மூன்றாவது பிரிவில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி போன்றவைகளை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி நாளையும் நாளை மறுநாளும் 20 ஆயிரம் மாணவ மாணவிகளை அழைத்து கால்நடை தொடர்பான பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட உள்ளன.