தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இன்று மற்றும் நாளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 9.30 மணி நிலவரப்படி சென்னையில் நடப்பு பருவமழையானது மொத்தமாக 930 மில்லி மீட்டர் அளவுக்கு பதிவாகியுள்ளது. ஆனால் இதே காலத்தில் கடந்த 2020-ம் வருடம் 1034 மில்லி மீட்டர் மழையும், கடந்த வருடம் 1485 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. எனவே இந்த வருடமும் 1000 மில்லி மீட்டர் மழை பொழிவை ஹாட்ரிக் வெற்றி பதிவாகிவிடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அநேக இடங்களிலும் தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.