டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தைக்கு ஆயிரம் கிலோமீட்டர் கடந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள தாயிடமிருந்து தினமும் தாய்ப்பால் கொண்டுவரப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது
ஜம்மு-காஷ்மீரில் பகுதியில் வசித்து வந்த தம்பதியினருக்கு கடந்த மாதம் 16ம் தேதி குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த சமயம் குழந்தை குடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு உள்ளது. இது குறித்து மருத்துவரிடம் கேட்டபொழுது குழந்தைக்கு உணவுக்குழாயில் ஏதோ பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து பதறிப்போன குழந்தையின் தாயான டோர்ஜே கணவர் வாங்க்டஸ்க்கு தகவல் கொடுக்க அவர் தனது குருவிடம் மிகுந்த கவலையுடன் தனது குழந்தையின் நிலை குறித்து தெரிவித்துள்ளார்.
குருவின் உறவினர்கள் மருத்துவர்களாக இருந்தமையால் அவர்களிடம் ஆலோசனை கேட்ட குரு குழந்தையை உடனடியாக டெல்லி அல்லது சண்டிகரில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கூறியுள்ளார். கொரோனா அச்சத்தால் தாய் டோர்ஜே குழந்தையுடன் பயணிக்க முடியாமல் சகோதரரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். அதேநேரம் மைசூரில் பணிபுரிந்து வந்த குழந்தையின் தந்தை வாங்க்டஸ் டெல்லிக்கு சென்று தனது மைத்துனன் கொண்டு வந்த தனது குழந்தையை பெற்று மருத்துவமனையில் சேர்க்க குழந்தைக்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்கு தந்தை சம்மதம் தெரிவித்ததையடுத்து பிறந்து 2 நாட்களே ஆன பிஞ்சுக் குழந்தைக்கு மருத்துவர்கள் வெற்றிகரமாக ஆபரேஷனை செய்து முடித்தனர். அதன் பின்னர் குழந்தைக்கு ஊட்டச்சத்து கிடைக்க வேண்டுமானால் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் குழந்தையின் தாய் ஜம்மு-காஷ்மீரில் இருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் திணறிய தந்தை தனது நண்பர்கள் விமான நிறுவனத்தில் பணிபுரிவது நினைவுக்கு வர அவர்களிடம் உதவி நாடியுள்ளார். பின்னர் அவர்களும் இலவசமாக தினமும் தாயிடமிருந்து தாய்ப்பாலை வாங்கி கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டனர்.
ஏழு குப்பிகள் அடங்கிய சிறப்பு பெட்டகம் நேற்று விமானம் மூலம் ஜம்முக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் தாய்ப்பால் நிரப்பப்பட்டு டெல்லியில் இருக்கும் குழந்தைக்குக் கொடுக்க வந்து சேர்ந்தது. இவ்வாறு ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில் இருந்து நடந்து வருகின்றது சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவிலிருந்து தாய் அனுப்பிவைக்கும் தாய்ப்பாலைக் குடித்து குழந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ள நிலையில் அடுத்த வெள்ளிக்கிழமை அந்த பிஞ்சு குழந்தை டிஸ்சார்ஜ் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனது குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்கு குரு அதிக அளவில் உதவி செய்ததால் அவரது பெயரையே குழந்தைக்கு வைக்கப் போவதாக வாங்க்டஸ் தெரிவித்துள்ளார்.