இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் ராஜபக்சே குடும்பத்தினர் தான் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக பொதுமக்கள் ராஜபக்சே குடும்பத்தினரை அனைத்து பதவிகளில் இருந்தும் விலக வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 9-ம் தேதி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனால் கோத்தபய தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்று அங்கிருந்து பின் சிங்கப்பூருக்கு சென்றார்.
இவர் தன்னுடைய அதிபர் பதவியை ராஜினாமா செய்ததால் இலங்கையில் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்தும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் காலி முகத்திடலில் உள்ள போராட்டக்காரர்களை வெளியேற வலியுறுத்தி காவல்துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை எதிர்த்து பொதுமக்கள் நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
அதில் போராட்டம் செய்யும் பொது மக்களின் உரிமையை காவல்துறையினர் பறிக்கின்றனர் எனவும், நாங்கள் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் வரை காவல்துறையினரின் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென போராட்டக்காரர்கள் காலி முகத்திடலை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக புது வடிவில் போராட்டம் நடத்தவும் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
இதனால் 123 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. மேலும் காலி முகத்திடலில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேறியதால் நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கை வாபஸ் வாங்கியதோடு, அதிபர் ஆட்சியை ஒழிக்க வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடைபெறும் எனவும் மக்கள் கூறியுள்ளனர்.