கன்னியகுமாரியில் திருமணமாகி 10 மாதங்களே ஆன நிலையில் இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை அடுத்த பாலப்பள்ளம் மேல்விலை கிராமத்தைச் சேர்ந்தவர் மெர்லின். இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணி முடித்து விட்டு வீட்டிற்கு காரை பணிமனையில் விட்டு, வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மேலப்பாளையத்தின் முன் புதிய வீடு ஒன்று கட்டப்பட்டுக் கொண்டிருந்தது.
அதற்காக மணல், கற்கள் உள்ளிட்டவை அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த மெர்லின் மணலில் சிக்கியதையடுத்து, இரு சக்கர வாகனம் தடுமாறி தூக்கி வீசப்பட்டதில் கற்களின் மீது விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலையால் நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.