Categories
உலக செய்திகள்

மின்சாரத்தை சேமிக்க…. இன்றிலிருந்து 10 மணி நேரங்கள் மின்வெட்டு… இலங்கை மக்கள் அவதி…!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்றிலிருந்து 10 மணி நேரம் மின்வெட்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அந்நாடு சுற்றுலா துறையை தான் பெருமளவில் நம்பியிருந்தது. இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரம் 90% பாதிப்படைந்தது. அந்நிய செலவாணி தட்டுப்பாட்டால் இறக்குமதியில் சிக்கல் உண்டாகியிருக்கிறது.

இதனால், உணவு பொருட்கள், அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்ததால் மக்கள் திண்டாடி வருகிறார்கள். நிதி இல்லாத காரணத்தால் மின் உற்பத்தி முடங்கிவிட்டது. ஒவ்வொரு நாளும் நாட்டில் பல மணி நேரங்களாக மின்வெட்டு ஏற்படுகிறது. நிதி நெருக்கடியை எதிர்கொள்ள அரசாங்கம், ஒவ்வொரு நாளும் சிக்கனத்தைக் கடைபிடித்து வருகிறது.

எனவே, எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக மின்வெட்டு நேரத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 8 மணி நேரங்கள் மின்வெட்டு ஏற்பட்ட நிலையில், 10 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக விவசாயம் சார்ந்த பணிகள் முடங்கக்கூடிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே, மின்சாரத்தை சேமிப்பதற்காக அரசு பணியாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்து பணியாற்றும் நடைமுறையை கொண்டுவர கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே, இலங்கை மக்கள் நிதி நெருக்கடியால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில் 10 மணிநேர மின்வெட்டு என்பது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |